Published : 15 Jan 2022 11:47 AM
Last Updated : 15 Jan 2022 11:47 AM
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் தற்காலிகமாகப் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட 116 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் சிகிச்சை பெற ஏராளமானோர் அரசு மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களைப் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"கோவை அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் 2 மாத காலம் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய 30 மருத்துவர்கள், 50 செவிலியர்கள், 10 அனஸ்தீசியா டெக்னீசியன், 10 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், 8 லேப் டெக்னீசியன், 4 ஓட்டுநர்கள், 3 ரேடியோகிராபர், ஒரு பயோ மெடிக்கல் இன்ஜினீயர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ளவர்கள் வரும் ஜனவரி 24-ம் தேதிக்குள் அசல் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், புகைப்படத்துடன் கோவை அரசு மருத்துவமனை முதல்வரை அணுக வேண்டும்.
டாக்டர்களுக்கு ரூ.60 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.14 ஆயிரம், பயோ மெடிக்கல் இன்ஜினீயருக்கு ரூ.20 ஆயிரம், ரேடியோகிராபர், லேப் டெக்னீசியன்களுக்கு ரூ.12 ஆயிரம், அனஸ்தீசியா டெக்னீசியன், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 28-ம் தேதி மருத்துவமனையில் நேர்காணல் நடைபெறும்."
இவ்வாறு கோவை மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT