Published : 13 Jan 2022 04:48 PM
Last Updated : 13 Jan 2022 04:48 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்ற மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரை கோவை மாவட்ட எஸ்பி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி மீன்கரை சாலையில் கடந்த 11ம் தேதி இரட்டை கண்பாலம் அருகே மேற்கு காவல் நிலைய போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் மதிசேகரன் மற்றும் தலைமை காவலர் சரவணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவுக்கு பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் இருந்து மாடுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகள் மற்றும் அவ்வழியாக வந்த கனரக சரக்கு வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர்.
இது தொடர்பாக செல்போனில் பதிவு செய்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இது குறித்து தகவலறிந்த கோவை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் விசாரணை நடத்தி காவலர்கள் இருவரும் லஞ்சம் வாங்கியதை உறுதி செய்தார். இதனையடுத்து, பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதிசேகரன் மற்றும் தலைமை காவலர் சரவணன் இருவரையும் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக தற்காலிக பணியிடை நீக்கம் செய்து எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT