Published : 05 Jan 2022 02:55 PM
Last Updated : 05 Jan 2022 02:55 PM
காரைக்கால் : தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க கோயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருப்பதாக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா தெரிவித்துள்ளார்.
திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் ரூ.7 கோடி செலவில் திருநள்ளாறில் ஆன்மிகப் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவக்கிரக கோயில்களை பிரதிபலிக்கும் வகையில் கோபுரங்களுடன் கூடிய நவக்கிரக தல அமைப்பு, பெரிய அளவிலான தியான மண்டபம், மூலிகைப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் திட்டமிடப்பட்டு ஆன்மிகப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா இன்று(ஜன.5) ஆன்மிகப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவா கூறியதாவது: ஆன்மிகப் பூங்கா அமைக்கும் பணி நிறைவுறும் தருவாயில் உள்ளது. புதுவை முதல்வர் ரங்கசாமி மூலம் ஆன்மிகப் பூங்கா திறக்கப்படவுள்ளது. இப்பூங்காவில் நன்கொடையாளர்கள் மூலம் பெரிய அளவிலான சிவன் சிலை ஒன்று நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி 6 மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும். பக்தர்களுக்கு மிக நல்ல ஒரு சுற்றுலா மையமாக இது அமையும்.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமைகளில் பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலின் 3 வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கோயிலில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை என புகார் எழுந்தது, உடனடியாக கோயிலில் ஆய்வு மேற்கொண்டு தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தவும், தனித்தனி வரிசைகள் அமைக்கவும் கோயில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT