Published : 31 Dec 2021 12:05 PM
Last Updated : 31 Dec 2021 12:05 PM

அரசின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதே எனக்கான புத்தாண்டுப் பரிசு: முதல்வர் ஸ்டாலின்

கோப்புப் படம்

சென்னை: அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கடமைகளை மேற்கொள்ளுவதே தனக்குக் கிடைக்கும் சிறப்பான புத்தாண்டுப் பரிசாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் ஆறாவது முறையாகத் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வருகிற முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 ஜனவரி 1-ம் நாளில், அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

எனினும், கரோனா நோய்த் தொற்றின் புதிய வடிவான ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உங்களின் முதல்வரான நானும், அந்தக் கடமையை உணர்ந்தவர்களாகக் கட்சித் தொண்டர்களாகிய நீங்களும் இருப்பதால், உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, புத்தாண்டு நாளான ஜனவரி 1-ம் தேதி அன்று என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கரோனா இரண்டாம் அலையின் பெரும்தாக்கத்தில் தமிழ்நாடு தவித்த நேரத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, அதனைத் திறம்படக் கட்டுப்படுத்தியதுபோல, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பையும் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன். எனவே அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கடமைகளை மேற்கொள்ளுங்கள். அதுவே எனக்கு நீங்கள் வழங்குகிற சிறப்பான புத்தாண்டுப் பரிசாகும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு இது என்றாலும், இனி வரும் காலங்களும் கழகத்தின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் தொண்டர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x