Published : 30 Dec 2021 02:53 PM
Last Updated : 30 Dec 2021 02:53 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி, நடிகை சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுநல அமைப்புகள் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனரைக் கிழித்து எறிந்தனர்.
புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை தனியார் நிறுவனத்தினர் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்குத் தொடர்ந்து தேசிய அளவில் பிரசித்தி பெற்ற இசைக்குழுவினர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிகை சன்னி லியோன் பங்கேற்கிறார். இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாயில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது உயர் நீதிமன்ற வழக்கின் உத்தரவில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பிரபலமானவர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நடிகை சன்னி லியோன் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தவர்கள் விழா ஏற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், புத்தாண்டை ஒட்டி புதுச்சேரியில் சன்னி லியோன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தமிழர் களம் மற்றும் பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழர் களம் செயலர் அழகர் தலைமையில் பலரும் பழைய துறைமுகச் சாலையில் கூடி கோஷம் எழுப்பியபடி துறைமுக வளாக நுழைவாயிலை அடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுப்புகளை வைத்து முற்றுகையிட முயன்றவர்களைத் தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே, ஆத்திரமடைந்த அமைப்பினர் நிகழ்ச்சிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சன்னி லியோன் பேனரைக் கிழித்தனர். உடனடியாக அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். பொதுநல அமைப்புகளின் முற்றுகை காரணமாக பழைய துறைமுகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT