Last Updated : 28 Dec, 2021 04:52 PM

 

Published : 28 Dec 2021 04:52 PM
Last Updated : 28 Dec 2021 04:52 PM

திருப்பூரில் 20 பேரிடம் ரூ.12.66 லட்சம் மோசடி: மூவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

கைது செய்யப்பட்ட முத்துவேல் | படம்: க.சக்திவேல்

கோவை: திருப்பூரில் அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, நிதி நிறுவனம் என்ற பெயரில் ரூ.12.66 லட்சம் மோசடி செய்த மூன்று பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கு பிடிவாரன்ட் பிறக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த லக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் சாமிநாதன், முத்துவேல், மணிவேல், ராஜேந்திரகுமார், லோகநாயகி, செல்வி. இவர்கள் கூட்டாக இணைந்து 'குபேரா ஆட்டோ ஃபைனான்ஸ்' என்ற நிறுவனத்தை 2010 முதல் நடத்தி வந்துள்ளனர். முதலீடு செய்தால் 24 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக விளம்பரம் செய்ததை நம்பி சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 பேர் மொத்தம் ரூ.12.66 லட்சம் முதலீடு செய்துள்ளனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி அசல், வட்டித் தொகை அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, முத்துசாமி என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2015-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி, நிறுவனத்தின் இயக்குநரான சாமிநாதன், முத்துவேல், மணிவேல் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, மொத்தம் ரூ.16 லட்சம் அபராதம் விதித்ததோடு, அபராதத் தொகையில் ரூ.15 லட்சத்தை முதலீட்டாளருக்கு பிரித்து அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கிலிருந்து ராஜேந்திர குமார், லோகநாயகி, செல்வி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத சாமிநாதன், மணிவேல் ஆகியோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜரான முத்துவேலை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x