Published : 27 Dec 2021 05:37 PM
Last Updated : 27 Dec 2021 05:37 PM
சென்னை: ஆன்லைன் சூதாட்ட உயிர் பலிகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புதுவை மாநிலம் குமராப்பாளையத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமர்நாத் ஆன்லைன் ரம்மியில் ரூ.30 லட்சத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த 3 மாதம் கருவுற்ற மனைவி ஆதரவற்றவராகியிருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் தாம்பரம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாததால் தமிழகம் மற்றும் புதுவையில் தற்கொலைகள் தொடர் கதையாகிவிட்டன!
தமிழ்நாட்டில் சூதாட்டத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பிறகு தற்கொலைகள் குறைந்தன. அந்தச் சட்டத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்த பிறகு தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது; தற்கொலைகள் அதிகரித்துவிட்டன!
திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போதிலும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு விசாரணை வரவில்லை. அதுவரைக்கும் தற்கொலைகள் தொடருவதை அனுமதிக்க முடியாது!
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க புதிய திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைத் தமிழக அரசு வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். புதுவை அரசும் அம்மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்!" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT