Published : 27 Dec 2021 02:41 PM
Last Updated : 27 Dec 2021 02:41 PM
அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அரியலூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் இணைக்கப்பட்டு பெரிய நகராட்சியாக மற்றப்படும் என மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
அரியலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று (டிச. 27) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உள்ளிட்டோர் கட்டிடத்துக்கான பூமி பூஜையைத் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "அரியலூரில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அரியலூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் இணைக்கப்பட்டு பெரிய நகராட்சியாக மாற்றப்படும். அரியலூர் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் ஊதியப் பிரச்சினை களையப்படும்" என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT