Published : 22 Dec 2021 05:54 PM
Last Updated : 22 Dec 2021 05:54 PM
புதுக்கோட்டை: காவிரி - குண்டாறு கால்வாயோடு புதுக்கோட்டை ஆறுகள் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், புதுக்கோட்டையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றிப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு திருமயத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று நூலை கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார். இம்மாநாட்டில், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.சின்னதுரை எம்எல்ஏ, ஐ.வி.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளராக மீண்டும் கவிவர்மன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், எம்எல்ஏ எம்.சின்னதுரை, ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், கே.சண்முகம், என்.பொன்னி, ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாகவும், இவர்களை உள்ளடக்கிய 41 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் மாநாட்டில், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கான பிரதான கால்வாயோடு புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்லும் தெற்கு வெள்ளாறு, அக்னி ஆறு, குண்டாறு, வில்லுனி ஆறு, அம்புலி ஆறு, பாம்பாறு, கோரையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளையும் இணைக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் அரசு மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும்,
மாவட்டத்தில் இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உத்தரவாதப்படுத்தும் வகையில் தொழில்பேட்டைகளை உருவாக்க வேண்டும், பெண்களின் திருமண வயதை 21- ஆக உயர்த்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகர்பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதோடு, அதற்கான கூலியையும், வேலை நாட்களையும் அதிகரிக்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT