Last Updated : 25 Oct, 2021 12:27 PM

1  

Published : 25 Oct 2021 12:27 PM
Last Updated : 25 Oct 2021 12:27 PM

ஸ்ரீரங்கம் கோயில் யானைகளுக்கும் குளியல் தொட்டி

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் யானைகளுக்கு கட்டப்பட்ட மிகப் பெரிய குளியல் தொட்டி இன்று பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, 2 யானைகளும் குளியல் தொட்டியில் இறங்கி, குதூகலமாகக் குளித்து மகிழ்ந்தன.

அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் ஆண்டாள் (44) மற்றும் லட்சுமி (22) ஆகிய 2 யானைகள் சேவையாற்றி வருகின்றன. இவற்றில் யானை ஆண்டாள் 35 ஆண்டுகளாகவும், யானை லட்சுமி ஒன்றரை ஆண்டுகளாகவும் சேவையாற்றி வருகிறது.

இந்த 2 யானைகளையும் குளிப்பாட்டுவதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோயிலுக்குச் சொந்தமான உடையவர் தோப்பில் 56 அடி நீளம்- அகலம், 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இன்று காலை 9.30 மணியளவில் கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்தபிறகு, கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய 2 யானைகளும் முதல் முறையாகக் குளியல் தொட்டியில் இறக்கப்பட்டன. தண்ணீரைக் கண்ட ஆர்வத்தில் 2 யானைகளும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து குதூகலமாகக் குளித்து மகிழ்ந்தன.

கோயில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருககன், மேலாளர் உமா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் கோயில் யானை அகிலாவுக்குக் கோயில் வளாகத்துக்குள்ளேயே நாச்சியார் தோப்புப் பகுதியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் கட்டப்பட்ட குளியல் தொட்டி ஜூன் 24-ம் தேதியும், மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி கோயில் யானை லட்சுமிக்கு, நந்தி கோயில் தெருவில் உள்ள நாகநாதர் சுவாமி கோயிலின் நந்தவனத்தில் 22 அடி நீளம், 22 அடி அகலம், 4 அடி ஆழத்தில் கட்டப்பட்ட குளியல் தொட்டி செப்.9-ம் தேதியும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x