Published : 04 Oct 2021 05:26 PM
Last Updated : 04 Oct 2021 05:26 PM
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்குப் பின் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்க, வழக்கத்திற்கு மாறாகக் குவிந்தனர்.
தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைதோறும் நடக்கும் குறைதீர் கூட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 7 மாதங்களாக நடைபெறாத குறைதீர் முகாம் இன்று நடந்ததால், முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கத் திரண்டனர். பச்சிளங் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் நீண்ட வரிசையில் மனுக்களுடன் காத்திருந்தனர். அவர்கள் போதிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் கூடியது நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.
அதனால், மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் காவல்துறையினர், சுகாதாரத் துறையினர் பொதுமக்களை வரிசைப்படுத்தினர். அவர்கள் குறைதீர் கூட்டத்திற்கு ஒவ்வொருவராக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் பெற்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அதில், உடனடியாகத் தீர்க்கக்கூடிய மனுக்களை உடனே நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT