Last Updated : 21 Sep, 2021 07:45 PM

 

Published : 21 Sep 2021 07:45 PM
Last Updated : 21 Sep 2021 07:45 PM

கோவை சிறுமுகை அருகே புலி உயிரிழப்பு; மருத்துவர்கள் ஆய்வு

கோவை சிறுமுகை வனச்சரக்துக்குட்பட்ட வனப்பகுதியில் அழுகிய நிலையில் இருந்த புலியின் சடலம்.

கோவை

கோவை சிறுமுகை அருகே புலி உயிரிழந்து கிடந்ததை அடுத்து மருத்துவர்கள் மரணத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவை சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட, கூத்தாமுண்டி, வரமலை வனப்பகுதியில் நேற்று (செப்.20) மாலை வனப்பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அழுகிய நிலையில் புலி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து இறந்த புலியின் உடல், தேசியப் புலிகள் பாதுகாப்புக் குழு விதிமுறைகளின்படி இன்று உடற்கூராய்வு செய்யப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில், கோவை வனக் கால்நடை மருத்துவர் சுகுமார், கால்நடை உதவி மருத்துவர்கள் தியாகராஜன், வசந்த் ஆகியோர் இணைந்து பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக மருத்துவர் சுகுமார் கூறும்போது, “இறந்த புலியானது நன்கு வளர்ந்த, முதிர்ந்த புலி. இந்த புலி இறந்து ஒரு வாரம் ஆனதால் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்தன. இதற்கு 7 வயது இருக்கும். இந்தப் புலி ஆண் புலியா என்பது டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவரும். புலியின் கால் நகங்கள், கோரைப் பற்கள் ஆகியவை உடலில் இருந்தன. அவை ஏதும் காணாமல் போகவில்லை.

புலி சண்டையிட்டுக் கொண்டதற்கான காயங்கள் ஏதும் தோலில் இல்லை. எனவே, நகத்துக்காகவும், தோலுக்காகவும் இந்த புலி கொல்லப்படவில்லை என்று தெரிகிறது. புலியின் இறப்புக்கான உண்மை காரணம் குறித்து அறிய மலம், வயிற்றுப் பகுதியில் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு, தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் முடிவில் புலி இறப்புக்கு விஷம் காரணமா, இல்லையா என்பது தெரியவரும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x