Published : 14 Aug 2021 08:43 PM
Last Updated : 14 Aug 2021 08:43 PM

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் திரண்ட அதிமுகவினர்: பின்னணி என்ன?

மதுரை

டெல்லி சென்று பாஜகவில் இணைவதாகக் கூறப்பட்ட முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை வரவேற்க எப்போதும் இல்லாத வகையில் மதுரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமானவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் அதிமுகவில் அதிகாரமிக்கவராகவும் வலம் வந்தவர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பாஜகவிற்கு ஆதரவாகவும், இந்துதுவா கொள்கைகளுக்கு ஆதரவாகவும் பேசி அடிக்கடி சர்ச்சைக்குள்ளானார். அதிமுகவில் பகிரங்கமாகவே பாஜகவின் ஆதரவாளராக செயல்பட்டவர்.

இவரது சர்ச்சைப் பேச்சுகளாலேயே கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையத்தில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி தோல்வியடைந்தார். அதன்பிறகு கட்சி செயல்பாடுகளில் முன்போல் தீவிரமில்லாமல் அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்ற ராஜேந்திரபாலாஜி, பாஜகவில் இணைவதாக தகவல் பரவியது. ஆனால், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி அதை மறுத்து அவர் எம்ஜிஆர் காலத்திலேயே இருந்து அதிமுகவில் உள்ளார் என்றும், பாஜகவில் இணையவே மாட்டார் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அதன்பிறகே அவரது பாஜக இணைப்பு தகவல் ஒரளவு அடங்கியது. ஆனாலும், அவர் எந்த நேரத்திலும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும், திரைமறைவில் அதிமுக தரப்பில் அவரை சமாதானம் செய்வதாகவும் கூறப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய ராஜந்திர பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.

இன்று மாலை சென்னையில் இருந்து மதுரை விமானநிலையத்திற்கு வந்த ராஜேந்திர பாலஜியை வரவேற்க ஆயிரகணக்கான அதிமுகவினர் திரண்டனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அவருக்கு, மதுரையில் இதுபோன்ற பிரம்மாண்ட வரவேற்பு ஏன் என்று தெரியாமல் உளவுத்துறை போலீஸார் திகைத்துப்போயிருந்தனர்.

அவர் பாஜகவிற்குச் செல்லாமல் அதிமுகவில் இருப்பதை உறுதி செய்யவே விருதுநகரில் இருந்து ஏராளமானக் கட்சியினரை அழைத்து வந்து திட்டமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x