Published : 10 Aug 2021 04:04 PM
Last Updated : 10 Aug 2021 04:04 PM
வெள்ளை அறிக்கைக்கும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கும் சம்பந்தமில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் இன்று (ஆக.10) ஆய்வு செய்தனர்.
அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ''தமிழகத்துக்குப் போதுமான அளவு கரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனப் பல்வேறு நிலைகளிலும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். லஞ்ச ஒழிப்பு சோதனைக்கும், தமிழக அரசின் வெள்ளை அறிக்கைக்கும் சம்பந்தமில்லை. தமிழகத்தின் நிதி நிலவரத்தைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில்தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இழப்புகளின் அடிப்படையில் பேருந்து மற்றும் மின்சாரக் கட்டணம் உயரும் என மக்கள் அச்சப்படத் தேவையில்லை. முழுக்க முழுக்க வெள்ளை அறிக்கை என்பது, மக்கள் தமிழகத்தின் நிதி நிலவரத்தை அறிந்துகொள்வதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மதுரை உள்ளிட்ட 12 மருத்துவக் கல்லூரிகளிலும் மத்திய அரசின் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்வர். அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை குறித்து மத்திய அரசு அறிவிக்கும். இவ்வருடத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT