Published : 03 Aug 2021 03:51 PM
Last Updated : 03 Aug 2021 03:51 PM
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்தார்.
தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் திறப்பு விழா நேற்று (ஆக. 02) நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில், நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கிய, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆக. 03) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சூலூர் விமானப் படைத் தளத்துக்கு வந்தார்.
அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் 3 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகை வந்தடைந்தார். அவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்று முதன்முறையாக நீலகிரி மாவட்டம் வந்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11.45 மணிக்கு உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கினார். அவருடன் மனைவி சவீதா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தனர்.
தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் வரவேற்றனர். தீட்டுக்கல்லில் இருந்து கார் மூலம் நண்பகல் 12.10 மணிக்கு ராஜ்பவன் சென்றடைந்தார்.
ராஜ்பவனில் தங்கும் அவர் நாளை (ஆக.4) வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில், பயிற்சி பெறும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். இதற்காக அவர் சாலை மார்க்கமாக வெலிங்டன் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, அவர் ஒரு பழங்குடியினர் கிராமம் மற்றும் தேயிலைத் தொழிற்சாலையைப் பார்வையிட உள்ளார்.
6-ம் தேதி காலை 10.30 மணியளவில் உதகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT