Published : 02 Aug 2021 09:21 PM
Last Updated : 02 Aug 2021 09:21 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் நடத்தப்படும் மொய் விருந்து விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி வட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மொய் விருந்து விழா நடத்துவது வழக்கம். இந்நிலையில், கரோனா பரவலினால் கடந்த ஆண்டு குறிப்பிட்ட தேதிகளில் நடத்தாமல், பின்னர் நடத்தப்பட்டது.
இந்நிலையில், நிகழ் ஆண்டு மொய் விருந்து விழா ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மொய் விருந்து விழா நடத்துவதற்கு தடை விதித்து ஆட்சியர் கவிதா ராமு இன்று (ஆக.2) உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, " திருமணம், ஈமச்சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.
இவற்றைத் தவிர மொய் விருந்து போன்ற விழாக்களுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து விழா நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மீறி நடத்தினால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பானது மொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT