Published : 01 Aug 2021 12:33 PM
Last Updated : 01 Aug 2021 12:33 PM

மாநகரங்களை அழகுபடுத்துவதாகக் கூறி பூர்வகுடிகளை வெளியேற்றும் திமுக அரசு: டிடிவி கண்டனம்

சென்னை

மாநகரங்களை அழகுபடுத்துவதாகக் கூறி பூர்வகுடிகளைத் திமுக அரசு வெளியேற்றி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள தொடர் ட்விட்டர் பதிவுகளில், ''மாநகரங்களை அழகுபடுத்துவதாகக் கூறி தலைமுறை, தலைமுறையாக அங்கே வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்காமல், கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மூலம் அவர்களை வெளியேற்றும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆரம்பித்திருக்கிற இந்த அதிகார அத்துமீறல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. திமுக ஆட்சிக்கு வந்தாலே தங்களை வளப்படுத்திக் கொள்ள சென்னையைச் சிங்காரிக்கிறோம், கூவத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று கிளம்பிவிடுவார்கள்.

இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்களை வீதியில் நிறுத்தி விட்டு யாருக்காக இவர்கள் செயற்கை அழகை ஏற்படுத்த நினைக்கிறார்கள்? தமிழகத்தில் இனி வேறெங்கும் இதுபோல் நடக்கக்கூடாது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்துகிறேன்'' என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x