Published : 31 Jul 2021 02:36 PM
Last Updated : 31 Jul 2021 02:36 PM
விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், தொகுதிக்கு உட்பட்ட டி.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், சக்கம்மாள்புரம், பொம்மையாபுரம், சிவஞானபுரம், கருப்பூர், தாப்பாத்தி, கீழதோழ்மலையான்பட்டி, கீழ்நாட்டுக்குறிச்சி, சக்கிலிபட்டி, கீழமுத்துலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணி, உரிய சம்பளம், பேருந்து சேவை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் குறித்துக் கேட்டு, பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கோரிக்கைகள் நிறைவேற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் செயல்படுத்தப்பட உள்ள 5,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பும், பங்களிப்பும் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலைக்கு வந்த எம்எல்ஏ, பணி ஓய்வு பெற்ற 4 பேருக்குத் தலா ரூ.3.75 லட்சம் வீதம் பணிக்கொடைத் தொகையை வழங்கினார். மேலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்குச் சீருடைகளை வழங்கினார்.
அவருடன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பாரதி கூட்டுறவு நூற்பாலை சேர்மன் ஆழ்வார் உதயகுமார், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் நவநீத கண்ணன், பேரூர் செயலாளர்கள் பாரதி கணேசன், வேலுச்சாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் சுந்தர், மாணவரணி அமைப்பாளர் மயில்ராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்ன மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாகண்ணு, முத்துலட்சுமி அய்யன்ராஜ், மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் இம்மானுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம் அருகே கருப்பூர் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT