Published : 30 Jul 2021 04:32 PM
Last Updated : 30 Jul 2021 04:32 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மயானம் கிடைக்காததால் 2 நாட்களாக காத்திருந்து போலீஸார் பாதுகாப்புடன் இறந்தவர் உடலை குன்றக்குறவர்கள் அடக்கம் செய்தனர்.
காரைக்குடி அருகே அரியக்குடி மலைவேடன் நகரில் 80-க்கும் மேற்பட்ட குன்றக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரியக்குடியில் மற்ற பிரிவினர்களுக்கு தனித்தனி மயானங்களும், பொது மயானங்களும் உள்ளன.
ஆனால் குன்றக்குறவர்களுக்கென மயானம் இல்லை. மேலும் அவர்களில் யாரேனும் இறந்தால், பொது மயானங்களில் புதைக்க அங்குள்ள சிலர் அனுமதிப்பதில்லை.
இதனால் 5 கி.மீ. தொலைவில் உள்ள காரைக்குடி சந்தைபேட்டை மயானத்தில் இறந்தவர்களை புதைத்து வந்தனர்.
இந்நிலையில் ஜூலை 28-ம் தேதி அதிகாலை மலைவேடன் நகரில் சங்கரன் மனைவி நாகம்மாள் (62) என்பவர் இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை அரியக்குடியில் உள்ள பொது மயானத்தில் புதைக்க அப்பகுதியினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரேதத்தை புதைக்காமல் வீட்டிலேயே வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வட்டாட்சியர் அந்தோணிராஜிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வட்டாட்சியர், போலீஸார், எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இடையகண்மாயில் உள்ள பொதுமயானத்தில் இறந்தவர் உடலை புதைக்க நடவடிக்கை எடுத்தனர்.
மயானம் இல்லாமல் 2 நாட்களாக காத்திருந்து பிரேதத்தை புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குன்றக்குறவர்கள் கூறுகையில், ‘ எங்களுக்கு பொதுமயானத்திலேயே தொடர்ந்து புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தனி மயானமாவது ஏற்படுத்தித் தர வேண்டும்,’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT