Published : 29 Jul 2021 05:07 PM
Last Updated : 29 Jul 2021 05:07 PM

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு: 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும்

ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல் போகப் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவைத்த மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி. உடன் ஓசூர் உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, எம்எல்ஏ பிரகாஷ் மற்றும் பலர்.

ஓசூர்

ஓசூர் வட்டம் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 135 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி கலந்துகொண்டு கெலவரப்பள்ளி அணையில் இருந்து வலதுபுற மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து வைத்தார்.

ஓசூர் வட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையின் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலமாக 5,918 ஏக்கரும், வலதுபுற பிரதான கால்வாய் மூலமாக 2,082 ஏக்கரும் ஆக மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடைகின்றன. இதனால் ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்தில் உள்ள தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்தமுத்தாளி, முத்தாளி, அட்டூர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகொல்லு, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூர், அட்டகுறுக்கி, நல்லகானகொத்தப்பள்ளி, மார்த்தாண்டப்பள்ளி ஆகிய 22 கிராமங்களும் பயன்பெறுகின்றன.

அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர்வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 135 நாட்களுக்குச் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில் முதல் 10 நாட்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் திறந்தும், அடுத்த 5 நாட்கள் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டும், இதுபோல மொத்தம் 9 முறை சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆகவே விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஓசூர் நகர பிரமுகர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x