Published : 28 Jul 2021 10:03 PM
Last Updated : 28 Jul 2021 10:03 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை மாநகராட்சி ஆக்குவதற்கான சாத்தியக்கூறு விவரங்களை நகராட்சி நிர்வாக ஆணையரகம், நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுப் பெற்றுள்ளது.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது 1928-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டமாக பிரிந்த பின் 1988-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013-ஆம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 13.75 ச.கி.மீ. பரப்பு கொண்டது. ஆண்டு வருவாய் ரூ.25 கோடிக்கு மேல் உள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகம், சிக்ரி மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம், பிஎஸ்என்எல், ஆவின் போன்றவன்றின் மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன. மேலும் தினமும் காரைக்குடிக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இதையடுத்து காரைக்குடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த 2015 மே மாதம் அப்போதைய நகராட்சித் தலைவர் கற்பகம்இளங்கோ தலைமையில் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காரைக்குடி நகராட்சியுடன் கோட்டையூர் பேரூராட்சி மற்றும் சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படும். மேலும் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரைக்குடி நகராட்சி-1.06 லட்சம் பேர் உள்ளனர்.
மற்ற பகுதிகளை சேர்க்கும்போது 3 லட்சத்துக்கு மேல் உயரும். பரப்பும் 83.44 சதுர கி.மீ. ஆக விரிவடையும். ஆண்டு வருவாயும் ரூ.30 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அரசியல் அழுத்தம் இல்லாததால் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் காரைக்குடியை தரம் உயர்த்துவதற்கான சாத்தியகூறுகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையரகம் விவரம் கேட்டுள்ளது.
இதில் பரப்பு, மக்கள்தொகை, வருவாய், இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகள் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘காரைக்குடியை போன்று பல நகராட்சிகளிலும் விவரம் கேட்கப்பட்டுள்ளது. இந்தாண்டே காரைக்குடி தரம் உயருமா என்பது தெரியாது,’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT