Published : 21 Jul 2021 04:27 PM
Last Updated : 21 Jul 2021 04:27 PM
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே சந்தன மரத்தை வெட்ட முயன்ற கேரளாவைச் சேர்ந்த 2 பேர் உட்பட 4 பேருக்கு வனத்துறையினர் ரூ.40,000 அபராதம் விதித்தனர்.
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகில், கூடலூர் கவுண்டம்பாளையம் - கட்டாஞ்சிமலை இடையே வனப் பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 20) நள்ளிரவு 1 மணியளவில், தடாகம் காப்புக் காட்டின் எல்லையில் வெளிச்சம் நகர்வதைப் பணியாளர்கள் கவனித்தனர்.
இதுகுறித்துப் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, அப்பகுதிக்கு மற்றொரு வனப் பணியாளர்கள் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டது. இரு குழுவினரும் இணைந்து வெளிச்சம் வந்த பகுதியைச் சுற்றி வளைத்தனர். அங்கு நான்கு பேர் வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலத்தில், சந்தன மரத்தை வெட்ட முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த வனத்துறையினர், ரம்பம், வெட்டுகத்தி ஆகியவற்றைக் கைப்பற்றினர். அங்கிருந்த சந்தன மரம் வெட்டப்படுவது தடுக்கப்பட்டது.
விசாரணையில், பிடிபட்டவர்கள் கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த ஜாலி ஜேக்கப் (55), மன்னார்காட்டைச் சேர்ந்த மொய்தீன் (44), கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (54), மேட்டுப்பாளையம், சுண்டப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (36) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT