Published : 15 Jul 2021 02:35 PM
Last Updated : 15 Jul 2021 02:35 PM
திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வரும் 25 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மம்தா டெல்லிக்குச் செல்வது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தின்போது சோனியாவை மட்டுமல்லாது மற்ற ஒருமித்த கொள்கை கொண்ட கட்சியினரையும் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை, எகிறும் விலைவாசி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு ஒன்றிணைந்து எதிர்ப்பது குறித்து இந்த சந்திப்பின் போது மம்தா சோனியாவுடன் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான உத்திகளில் கூடுதல் கவனம் செலுத்திவர காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் அனைத்தும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வியூகத்தில் முனைப்பு காட்டி வருகின்றன.
தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சந்த பவார், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் உ.பி. செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசியதும் கூட மிஷன் 2024 திட்டத்தின் ஒரு பகுதி என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில், மம்தா பானர்ஜி, சோனியாவை சந்திக்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT