Published : 12 Jul 2021 08:53 PM
Last Updated : 12 Jul 2021 08:53 PM
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாத்ரி நிவாஸில் தங்குவதற்கு நாளை (ஜூலை 13) முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக பஞ்சக்கரை சாலையில் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை தங்கலாம்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதிக்கும் பக்தர்கள் வருகை இல்லை.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் யாத்ரி நிவாஸில் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்ததையடுத்து, ஜூலை 10-ம் தேதி யாத்ரி நிவாஸ் வளாகம் முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து அறிவுறுத்தலின் பேரில், யாத்ரி நிவாஸ் முழுவதும் தூய்மைப் பணி, கிருமிநாசினி தெளிக்கும் பணி தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஜூலை 24-ம் தேதி முதல் யாத்ரி நிவாஸில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து கூறும்போது, "ஜூலை 23-ம் தேதி தன்வந்திரி ஹோமம் நடத்தி, ஜூலை 24-ம் தேதி முதல் யாத்ரி நிவாஸில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்காக பக்தர்கள் இணையதளம் மூலம் நாளை (ஜூலை13) முதல் முன்பதிவு செய்யலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT