Published : 12 Jul 2021 06:48 PM
Last Updated : 12 Jul 2021 06:48 PM

நத்தம் அருகே சாலை ஓரத்தில் தென்னை ஓலையை சுற்றி வரையப்பட்ட கோடு: உண்மை நிலை தெரியாமல் கலாய்த்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் 

நத்தம்  

‘யாருப்பா அந்த பெயிண்டர்’ என்ற தலைப்பில் மீம்ஸில் இடம்பெற்ற புகைப்படம் குறித்த உண்மைத் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே ‘யாருப்பா அந்த பெயிண்டர்’ எனக் கூறி சாலையின் ஓரம் வரையப்பட்ட வளைவான எச்சரிக்கைக் கோடு படத்துடன் மீம்ஸ்கள் வைரலாகி அதிகம் பகிரப்பட்டன.

இந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை அறிந்ததில் அங்குள்ள குழியை மூடுவதற்கு தென்னை ஓலை பயன்படுத்தப்பட்டதும் குழியை சுற்றிவளைத்து கோடு வரையப்பட்டதும் தெரியவந்தது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் மணியக்காரன்பட்டியில் தான் மீம்ஸில் வெளியான சாலை இருப்பது தெரியவந்தது.

சமூக வலைதளங்களில் அந்த சாலையின் புகைப்படத்தை எடுத்து பெயிண்டர், குறித்து மீம்ஸ்கள் உலா வரத்தொடங்கின. இந்நிலையில், மீம்ஸில் இடம்பெற்ற திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் மணியக்காரன்பட்டி சாலையை நேரில் சென்று பார்த்தபோது, சாலை ஓரத்தில் காவிரி குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கப்பட்டு வால்வு அமைக்க சிறு தொட்டி கட்டப்பட்டிருந்ததும் தெரிந்தது.

இந்த சிறு தொட்டி சாலையோரம் இருப்பதால் இரவில் வாகனங்களில் வருபவர்களுக்கு தெரிய அந்த இடத்தில் கோடு வளைந்து வரையப்பட்டிருந்தது. அப்போதும் சிறு சிறு விபத்துக்கள் நடந்ததால் பள்ளமான பகுதியில் தென்னை மட்டை வைத்துள்ளனர்.

ஆனால் இது எதுவும் தெரியாமல், அந்த வழியே சென்றவர் சாலையை புகைப்படம் எடுத்தபோது, சாலையோரம் கிடந்த தென்னை மட்டையை அப்புறப்படுத்தாமல் கோடு வரைந்துள்ளது போல் தெரிந்துள்ளது.

இதை மீம்ஸ் ஆக்கி வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

தென்னை மட்டை இல்லாமல் இருந்திருந்தால் புகைப்படத்தில் அங்கு உள்ள குடிநீர் வால்வுக்கென உருவாக்கப்பட் சிறு பள்ளம் தெரிந்திருக்கும்.

இந்த இடத்தில் விபத்தை தவிர்க்க கோடு மட்டும் போட்டால் போதாது, அப்பகுதியில் உள்ள காவிரி குடிநீர் இணைப்பு வால்வு பகுதியை சற்று தள்ளி அமைக்கவேண்டும் அல்லது அப்பகுதியில் வலுவான மூடி அமைத்து சாலையை வளையாமல் செல்ல ஏற்பாடு செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x