Published : 12 Jul 2021 06:35 PM
Last Updated : 12 Jul 2021 06:35 PM
மதுரையில் குழந்தை விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்பகத்தின் அங்கீகாரத்தை ரத்துசெய்யக் கோரி சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரிடம் வழக்கறிஞர்கள் இன்று மனு அளித்தனர்.
மதுரை மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் மற்றும் சார்பு நீதிபதியான வி.தீபாவிடம், வழக்கறிஞர்கள் முத்துக்குமார், அர்ச்சனாதேவி, ராஜேஸ்வரி, சட்டக் கல்லூரி மாணவிகள் காயத்ரி, கார்த்திகா மணி, திவ்யா, ஜெயா அழகேசன் ஆகியோர் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், ''மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்ததாக இதயம் அறக்கட்டளை நிர்வாகிகள் சிவகுமார், மதர்ஷா, கலைவாணி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அறக்கட்டளை கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் காப்பகத்தில் தங்கியிருந்த 26 முதியவர்கள் உடல்நலக் குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை முடிந்து வேறு காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மீண்டும் இதயம் காப்பகத்துக்குத்தான் செல்கிறோம் என நினைத்து, அங்கு வர மறுத்து, காப்பகத்தில் இருந்தவர்கள் தங்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும், தங்களுக்கு வந்த வீட்டு வாடகை, ஓய்வூதியத்தை அபகரித்துக் கொண்டதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதனால் இதயம் அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்யவும், முதியவர்களிடம் இருந்து வாங்கப்பட்ட பணம், உடைமைகளைத் திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை மேல் நடவடிக்கைக்காக அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT