Published : 12 Jul 2021 01:07 PM
Last Updated : 12 Jul 2021 01:07 PM
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாற்றுக் கற்பித்தல் முறையாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கத் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே முதற்கட்டமாக 40 சதவீதக் கட்டணத்தை மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரசு அறிவித்துள்ள கல்விக் கட்டணத்தைவிடக் கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்துள்ளபடி கட்டணம் எவ்வளவு என்பதை பள்ளிகளில் வெளிப்படையாக ஒட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று (ஜூலை 12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஓவியா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கார்த்திகா தேவி, நித்திஷ் குமார், சந்தோஷ், வைஷ்ணவி, வைரமணி, லக்சாகினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், கோரிக்கை மனுவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தத்திடம் அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT