Published : 10 Jul 2021 06:40 PM
Last Updated : 10 Jul 2021 06:40 PM
திருச்சியில் ஆங்கிலேயருக்கு எதிராக வெளியிடப்பட்ட ஜம்புத்தீவு பிரகடனத்தின் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி எம்.பி., சு.திருநாவுக்கரசர், ஆட்சியர் சு.சிவராசு ஆகியோரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
ஜம்புத்தீவு பிரகடன நினைவுச் சின்னம் அமைப்புக் குழு, அகமுடையார் வரலாறு மீட்புக்குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் திருச்சியில் எம்.பி., சு.திருநாவுக்கரசர், ஆட்சியர் சு.சிவராசு ஆகியோரை இன்று சந்தித்து அளித்த மனுவில், ''இந்திய சுதந்திரப் போர் என வரலாற்றில் குறிப்பிடப்படும் சிப்பாய் கலகத்துக்கு (1857ஆம் ஆண்டுக்கு) முன்பாகவே தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மருதுபாண்டியர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது.
1801-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி ஆங்கிலேயர்களுக்கு எதிராக சாதி, மத, பேதமின்றி அனைத்து மக்களையும், சிற்றரசர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்கும் விடுதலை வேண்டி திருச்சி மலைக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் சுவர்களில் எழுத்துபூர்வமாக ஜம்புத்தீவு பிரகடன் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போர் பிரகடனத்தை வெளியிட்டனர். இந்தப் பிரகடனம் ஆங்கிலேயரிடத்தில் ஏற்படுத்திய அச்சத்தின் விளைவாகவே அதே ஆண்டில் அக்.24-ம் தேதி மருது சகோதரர்களையும், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரையும் தூக்கிலிட்டனர்.
ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிட்ட மருதுபாண்டியர்களுக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையிலும், அடுத்து வரக்கூடிய இளம் தலைமுறையினர் இந்த வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையிலும் திருச்சி மலைக்கோட்டை அல்லது ஸ்ரீரங்கத்தில் ஜம்புத்தீவு பிரகடனம் தொடர்பாக ஒரு நினைவுச் சின்னம் அமைத்துத் தர வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.பி., சு.திருநாவுக்கரசர், ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் அவர்களிடம் உறுதியளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT