Published : 09 Jul 2021 10:19 AM
Last Updated : 09 Jul 2021 10:19 AM
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை அடைந்தது. பின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபகாலமாக, அதிமுகவைக் கைப்பற்றும் நோக்கத்தில், சசிகலா அக்கட்சி நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளன. இதைத் தொடர்ந்து, சசிகலாவுடன் பேசும் நிர்வாகிகளை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே, அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம் என, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என, ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்தனர்.
செப்.15-க்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கும் அதிமுக தயாராகி வருகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில், சசிகலா ஆடியோ விவகாரம், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கூட்டணி, அதிமுகவின் 50-வது ஆண்டு விழா உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT