Published : 06 Jul 2021 05:56 PM
Last Updated : 06 Jul 2021 05:56 PM
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் பங்கேற்க கமுதியைச் சேர்ந்த காவலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு அவரது கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் போட்டியிட ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள சிங்கப்புலியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் நாகநாதன்(25) தேர்வாகியுள்ளார்.
இவருக்கு அவரது கிராம மக்கள், தமிழ்நாடு அத்தெலடிக் அசோசியேஷன் தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், செயலாளர் சி.லதா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாகநாதன் தற்போது சென்னை எழும்பூரில் உள்ள தனி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச்சில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் நாகநாதன் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் அகில இந்திய அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் காவல்துறை சார்பில் பங்கேற்றுள்ளார்.
இதுகுறித்து நாகநாதன் கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று, நாட்டிற்கும், எனது கிராமத்திற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT