Published : 21 Jun 2021 12:37 PM
Last Updated : 21 Jun 2021 12:37 PM
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டு தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனி பகுதியில் ஏராளமான வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் சோதனை நடத்தி, பலரைக் கைது செய்துள்ளனர். ஆனாலும், இப்பகுதியில் உள்ள வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தாயில்பட்டி கலைஞர் காலனியில் சூர்யா (29) என்பவரது வீட்டில் இன்று காலை சோல்சா ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அப்போது சமையலறையில் ஏற்பட்ட தீ பட்டாசு மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் அடுத்தடுத்த வீடுகளில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் 4 வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.
மேலும் இவ்விபத்தில் அப்போலோ என்பவரது மனைவி செல்வமணி (35), இவர்களது 5 வயது மகன் ரகபியாசல்மோன், காளிராஜ் என்பவரது மனைவி கற்பகம் (35) ஆகியோர் உயிரிழந்தனர். சூர்யாவுக்கு 75 சதவீத தீக்காயமும், சோலையம்மாள் என்பவருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எஸ்.பி. மனோகரன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT