Published : 16 Jun 2021 09:12 PM
Last Updated : 16 Jun 2021 09:12 PM
சிவகங்கை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மளிகைப்பொருட்களில் 100-க்கு 5 பாக்கெட்கள் வரை மாயமாகியுள்ளதால் ரேஷன்கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் 15 முதல் 14 வகை மளிகைப் பொருட்கள் தொகுப்பு, நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக ஜூன் 11 முதல் ஜூன் 14-ம் தேதி வரை கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்திற்கு குறைந்த அளவே மளிகை பொருட்கள் வந்துள்ளன.
இதனால் மளிகைப் பொருட்கள் தினமும் ரேஷன்கடை ஒன்றுக்கு 100 முதல் 150 தொகுப்பு மட்டுமே நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனுப்பப்படுகின்றன. அதுவும் ரேஷன்கடை ஊழியர்களே வாகனங்களில் எடுத்து வருகின்றனர்.
மேலும் 14 வகை பொருட்களும் தனித்தனி மூடைகளில் இருப்பதால், அவற்றை பிரித்து மொத்தமாக ஒரு பையில் வைத்து, கார்டுதாரர்களுக்கு ரேஷன்கடை ஊழியர்கள் வழங்குகின்றனர்.
அவ்வாறு மூடைகளைப் பிரித்து எண்ணும்போது ஒவ்வொரு பொருளிலும் 100-க்கு 5 பாக்கெட்கள் வரை மாயமாகியுள்ளன. இதனால் ரேஷன்கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ரேஷன்கடை ஊழியர்கள் சிலர் கூறுகையில், ‘நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ஒவ்வொரு மளிகைப் பொருளையும் தனித்தனி மூடைகளில் கொடுக்கின்றனர். அவற்றை பிரித்து ஒரு பையில் வைப்பதற்கு தனியாக 3 பேர் தேவைப்படுகின்றனர். இதற்கு நாங்களே கூலி கொடுக்கிறோம். மேலும் ஒவ்வொரு பொருளிலும் 100-க்கு 5 பாக்கெட்கள் வரை குறைவாக உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் நாங்களே சொந்த செலவில் கடைகளில் வாங்கி கொடுக்கும்நிலை உள்ளது, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT