Published : 10 Jun 2021 09:54 PM
Last Updated : 10 Jun 2021 09:54 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு கொடுத்த இலவச பட்டா இருந்தும், இடத்தைக் காணவில்லை என மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர்.
வீடு இல்லாதோருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் பழனிசாமி 110 விதியில் அறிவித்தார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் பல நூறு பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இதில் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஜெகதீஸ்பாண்டியன், குமார் உள்ளிட்ட 5 பேருக்கு கடந்த ஜனவரியில் பேயன்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால் அந்த பட்டாக்குரிய இடத்தில் சிலர் வீடு கட்டியுள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளிகளால் அந்த இடத்தை பயன்படுத்த முடியாதநிலை உள்ளது.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை மீட்டு தர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் காரைக்குடி வட்டாட்சியர் அந்தோணிராஜிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாற்றம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்டத் தலைவர் பாலமுருகன் கூறுகையில், ‘‘ பல ஆண்டுகளாக போராடி, எங்களது சங்கத்தைச் சேர்ந்த 5 பேருக்கு முதற்கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா கொடுத்தனர்.
அந்த இடத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற இடத்தை மீட்டு தர வேண்டும். இல்லாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்,’’ என்று கூறினார்.
இதுகுறித்து வட்டாட்சியர் அந்தோணிராஜ் கூறுகையில், ‘‘ போலீஸார் உதவியோடு ஆக்கிரமிப்புகளை அகற்றி மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் மீட்டு தரப்படும்,’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT