Published : 10 Jun 2021 04:58 PM
Last Updated : 10 Jun 2021 04:58 PM
திருச்சி திருவானைக்காவல் கோயில் யானைக்கெனப் பிரத்யேகக் குளியல் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பஞ்சபூதத் தலங்களில் நீர்த் தலமாக, திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலில் அகிலா என்ற யானை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றி வருகிறது. இந்த நிலையில், கோயில் வளாகத்தில் யானை அகிலாவுக்கென பிரத்யேகக் குளியல் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாகக் கோயில் உதவி ஆணையர் செ.மாரியப்பன் கூறும்போது, ''யானை அகிலா 10 ஆண்டுகளுக்கும் மேலாக இறைப் பணியில் உள்ளது. இந்த நிலையில், யானை குளிப்பதற்காக கோயில் வளாகத்துக்குள் நாச்சியார் தோப்புப் பகுதியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் சுற்றுச் சுவருடன் கூடிய குளியல் தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
யானை எளிதாக இறங்கி, ஏற வசதியாக சரிவுப் பாதை அமைப்படுகிறது. குளியல் தொட்டி பணி ஓரிரு நாட்களில் நிறைவடையும். முன்னதாக, குளியல் தொட்டிக்குள் இறங்கி, ஏற யானை இப்போதே பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், யானைக்கு தினமும் நடைப் பயிற்சி அளிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் வனப் பகுதி அமைக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT