Last Updated : 05 Jun, 2021 08:18 PM

1  

Published : 05 Jun 2021 08:18 PM
Last Updated : 05 Jun 2021 08:18 PM

கரோனா ஊரடங்கு சமயத்தில் மானாமதுரை அருகே மணல் கடத்தல் தாராளம்: போலீஸ் சோதனைச்சாவடிகள் இருந்தும் பயனில்லை

மானாமதுரை அருகே புக்குளம் பகுதியில் மணல் அள்ளப்பட்ட வைகைஆறு.

மானாமதுரை

கரோனா ஊரடங்கு சமயத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் போலீஸ் சோதனைச்சாடிகள் இருந்தும் மணல் கொள்ளை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிப் பணிகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் போலீஸார் சார்பிலும் வாகனங்களை கண்காணிக்க பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் மானாமதுரை பகுதியில் இரவு நேரங்களில் லாரி, டிராக்டரில் மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்த மணல் கொள்ளை கீழப்பசலை, வேதியரேந்தல், புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆற்றிலும், கீழ்மேல்குடி கண்மாய் பகுதியிலும், அரிமண்டபம் ஓடை பகுதியிலும் அதிகளவில் நடந்து வருகிறது.

தொடர் புகாரையடுத்து சிலதினங்களுக்கு முன்பு, அரிமண்டபம் பகுதியில் ஓடையில் மணல் கடத்திய ஒரு டிராக்டரையும் புக்குளம் அருகே வைகை ஆற்றில் மணல் கடத்திய ஒரு லாரியையும் மானாமதுரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘எம்.சாண்ட், பி.சாண்ட் வந்தாலும் மணல் மீதான மோகம் மக்களிடம் குறையவில்லை. இதனால் ஒரு லோடு மணல் ரூ.24 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் மணல் அள்ள தடை உள்ளதால் திருட்டுதனமாக மணலை கடத்துகின்றனர்.

மேலும் ஊரடங்கு என்பதால் சோதனைச்சாவடிகளில் காய்கறி, பால் வாகனங்களை கூட சோதனை செய்யும் போலீஸார், மணல் கடத்தல் லாரிகளை பிடிப்பது இல்லை,’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x