Published : 01 Jun 2021 09:32 PM
Last Updated : 01 Jun 2021 09:32 PM
கரோனா பேரிடர் காலத்தில் 24 மணி நேரமும் பணியாற்றும் மின் வாரிய பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தெரிலாளர் சங்க மதுரை மண்டல தலைவர் ச.சசாங்கன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணி பொது மக்களிடம் நேரடியாகத் தொடர்புடையதாகும். பொது மக்களுக்கு மின்சாரம் தொடர்பான அனைத்து விதமான சேவைகளும் பிரிவு அலுவலகங்களால் மட்டுமே மேற்கொள்ளப் பெற்று வருகிறது.
மின்சாரத்தை விநியோகிப்பது, நுகர்வோரது வீட்டில் ஏற்படும் மின் தடங்கலை சரிசெய்வது, மின் தொடர்களில் ஏற்படும் தடங்கல் மற்றும் மின் தடை சரி செய்வது, மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளை மின் துண்டிப்பு செய்வது, பணம் செலுத்தியவுடன் மறு மின் இணைப்பு வழங்குவது, மற்றும் மின்மாற்றி, மின் தொடர் புதிதாக அமைப்பது , பராமரிப்பது, இரவுப்பணி, விடுமுறைநாள் பணி, அவசரப் பணி உள்பட இன்னும் பல பணிகள் தொடர்ச்சியாக செய்து வருகிறது.
சுமார் 30,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் களப்பிரிவில் உள்ள நிலையில் கடந்த மார்ச் முதல் கரோனா பேரிடர் காலம் துவங்கியது முதல் இது வரை மின்வாரியப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்து வருகின்றனர்.
பொது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதிலும் தடை ஏற்பட்டால் அதனை உடனே சீர் செய்வதிலும் தீரத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
இதுவரை 300 க்கும் மேற்பட்ட மின்வாரியப் பணியாளர்கள் கரோனாவிற்குப் பலியாகி உள்ளனர். எனவே மின் வாரியமும் தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்து நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் மின்வாரியப் பணியாளர்களை முன் களப்பணியாளர் என அறிவித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT