Published : 25 May 2021 08:58 PM
Last Updated : 25 May 2021 08:58 PM
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, 6 வகை சூப்கள், முட்டை, கொண்டைக்கடலை, நிலக்கடலையை கிராம இளைஞர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
திருப்புவனம் அருகே கானூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு உண்மை, உழைப்பு, உயர்வு என்ற பெயரில் வாட்ஸ்ஆப் குழு தொடங்கி ஊருக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் கரோனா 2-வது அலையால், தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தங்களது கிராமமக்களை பாதுகாக்க முடிவு செய்த இளைஞர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சமுதாயக் கூட்டத்தில் தினமும் மூலிகை சூப்களை தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இதனால் கிராமமக்கள், இளைஞர்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து சூப்களை தயாரிக்கின்றனர். முருங்கை சூப், கபசுர குடிநீர், தூதுவளை சூப், வெஜிடபில் சூப், காளான் சூப், வாழைத்தாண்டு சூப் ஆகிய 6 வகையான சூப்கள் மட்டுமின்றி, முட்டை, கொண்டைக்கடலை, நிலக்கடலையும் வழங்குகின்றனர்.
மேலும் அவர்கள் வெளியூர்களில் இருந்து வருவோர் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.
இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், ‘இதுவரை எங்கள் கிராமத்தில் ஒருவருக்கு கூட கரோனா தொற்று இல்லை.
மேலும் கரோனா பரவாமல் இருக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’ என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT