Published : 24 May 2021 02:56 PM
Last Updated : 24 May 2021 02:56 PM
கரூரில் தனியார் சாயப்பட்டறை ஊழியர்கள் 27 பேர் ஊரடங்கு காரணமாக தனியார் ஆம்னி பேருந்து மூலம் மேற்கு வங்கம் புறப்பட்டனர்.
வடமாநிலத் தொழிலாளர்கள் ஆண்கள், பெண்கள் என 27 பேர் சுமைகளுடன் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக இன்று (மே 24) காலை நடந்து சென்றனர். இதனைக் கண்ட கரூர் நகர இன்ஸ்பெக்டர் இரா.சிவசுப்பிரமணியன் அவர்களைத் தடுத்து விசாரித்தபோது, அவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் சரிவரத் தெரியாததால் சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை.
இதையடுத்து, அவர்களிடமிருந்து போனை வாங்கி அதில் தமிழ் தெரிந்தவர்களிடம் பேசியதில், தனியார் ஆம்னி பேருந்து மூலம் மேற்கு வங்கம் திரும்புவதற்காகப் பேருந்து ஏறச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் நேரிலும், பேருந்து ஓட்டுநரிடம் போனில் விசாரித்த இன்ஸ்பெக்டர் இரா.சிவசுப்பிரமணியன் அவர்களைச் செல்ல அனுமதித்தார்.
இவர்கள் அனைவரும் கரூரில் உள்ள தனியார் சாயப்பட்டறையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் தனியார் ஆம்னி பேருந்து மூலம் மேற்கு வங்கம் திரும்பத் திட்டமிட்டு, இன்று புறப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, போலீஸார் தனியார் ஆம்னி பேருந்தை அங்கு வரவழைத்து அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
பேருந்தில் ஏற்கெனவே சிலர் இருந்தனர். மேற்கு வங்கம் செல்லும் 35 பேர் பயணம் செய்கின்றனர். வெளிமாநில அனுமதி இல்லாததால், தமிழக எல்லை வரை இப்பேருந்து சென்று அங்கு மாற்றுப் பேருந்தில் அவர்கள் ஏற்றி அனுப்பப்படுவார்கள் எனவும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2,500 கட்டணம் எனவும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT