Published : 17 May 2021 06:12 PM
Last Updated : 17 May 2021 06:12 PM
சிவகங்கை கடைவீதியில் இன்று பொதுமக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சாலைகளுக்கு போலீஸார் ‘சீல்’ வைத்தனர்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலையால், தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பலசரக்குக் கடைகள் காலை 6 முதல் 10 மணி திறந்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் தினசரி சந்தை நடந்து வருகிறது. ஒரே இடத்தில் சந்தை நடப்பதால் இன்று காலையில் அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
அதேபோல் நேருபஜார் வீதியிலும் வாகனங்களில் செல்வோரால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து விழித்து கொண்ட போலீஸார் சிவகங்கை நகரின் முக்கிய வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகளால் அடைத்து ‘சீல்’ வைத்தனர்.
மேலும் பேருந்து நிலையத்தில் ஒரே இடத்தில் காய்கறி கடைகளை வைப்பதை தவிர்த்து, முக்கிய வீதிகளில் ஆங்காங்கே கடைகள் வைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாது என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT