Published : 02 Apr 2021 08:44 AM
Last Updated : 02 Apr 2021 08:44 AM
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டதைக் கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி நாட்றாம்பள்ளியில் பொதுமக்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சியில் மொத்தம் 5 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மல்லாரிப்பட்டி கிராமம் முழுவதும் 5-வது வார்டில் வருகிறது. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆந்திர மாநிலத்தை யொட்டியுள்ள இப்பகுதி மக்கள் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடுவோர்களுக்கு வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டு வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதில், சில வார்டுகள் பிரிக்கப்பட்டு புதிய வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலும் திருத்தியமைக்கப்பட்டது.
கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மல்லாரிப்பட்டி கிராம மக்கள் இதுவரை நடைபெற்று வந்த அனைத்து தேர்தலிலும் பழையனூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தி வந்தனர்.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் மல்லாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெறாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளுடன் மல்லாரிப்பட்டி - திருப்பத்தூர் சாலையில் இன்று திரண்டனர்.
அரசு சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை நடுரோட்டில் போட்டு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் விடுப்பட்டதால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக கூறி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ஜோலார்பேட்டை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட மல்லாரிப்பட்டி கிராம மக்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறி வாக்குவாதம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் மற்றும் மல்லாரிப்பட்டி கிராமமக்களின் வாக்காளர் பட்டியல்களை வாங்கி ஆய்வு செய்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதி, ‘‘யாருடைய பெயர்களும் நீக்கப்படவில்லை, பழையனூர் வாக்குச்சாவடிக்கு பதிலாக ஆத்துமேடு, பலராமன் வட்டம், ராமகவுண்டனூர், போத்தன்குட்டை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று நீங்கள் வாக்களிக்கலாம். அந்த வாக்குச்சாவடி மையத்தில் அனைவருடைய பெயர்களும் இடம் பெற்றுள்ளன என விளக்கம் அளித்தார். ஆனால், அதை ஏற்காத மல்லாரிப்பட்டி பொதுமக்கள் தங்களது கிராமத்தில் இருந்து ஆத்துமேடு, போத்தக்குட்டை, ராமகவுண்டனூர் பகுதிகள் தொலைவில் இருப்பதால் அங்கு சென்று வாக்களிக்க முடியாது. எனவே பழையனூர் வாக்குச்சாவடி மையத்திலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் எனக்கூறி மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கலந்து பேசிவிட்டு முடிவு தெரிவிப்பதாக கூறிவிட்டு சுமதி அங்கிருந்து புறப்பட்டார்.
மறியல் போராட்டத்தை கைவிட்ட மல்லாரிப்பட்டி கிராமமக்கள் வீடுகள் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு செய்ய போவதாக அறிவித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT