Published : 26 Mar 2021 06:12 PM
Last Updated : 26 Mar 2021 06:12 PM

தொடர் பிரச்சாரத்தால் தொண்டை பிரச்சினை: மதுரையில் பேச முடியாமல் சிரமப்பட்ட முதல்வர்

மதுரை

தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசி வருவதால் முதல்வர் கே.பழனிசாமி நேற்று மதுரை ஒத்தக்கடையில் பேசியதபோது தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டதால் பேச சற்று சிரமப்பட்டார்.

அவரது பேச்சு பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்குப் புரியாததால் அவர், 'வேறுவழியில்லை புரிந்து கொள்ளுங்கள்' என்று கூறி தொடர்ந்து பேசினார்.

முதல்வர் கே.பழனிசாமி மதுரை மாவட்டத்தில் மாநகர், புறநகர்ப் பகுதிகளில் 10 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக நேற்று முன்தினமே இரவே மதுரை வந்து தங்கினார்.

நேற்று காலை காலை 10 மணியளவில் மதுரை ஒத்தக்கடையில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவரது பிரச்சாரத்திற்காக மதுரை ஒத்தக்கடை வழியாக செல்லும் மாட்டுத்தாவணி-மேலூர் சாலையில் நேற்று காலை 9 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

மேலூர், ஒத்தக்கடை, திருவாதவூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள், மீனாட்சிமிஷன் மருத்துவமனை அருகே உள்ள ரவுண்டாவில் இருந்து ‘ரிங்’ரோடு வழியாக திருப்பி விடப்பட்டன.

அதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் சிரமப்பட்டனர். முதல்வர் ஒத்தக்கடையில் கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்துப் பேச ஆரம்பித்தபோது, அவர் பேச முடியாமல் தொண்டை கரகரவென்று இடையூறு செய்ய மிகவும் சிரமப்பட்டார்.

அவரது பேச்சு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்குப் புரியவில்லை. மேலும், ‘மைக்’கும் ஒத்துழைக்கவில்லை.

அதிருப்தியடைந்த அவர், ’என்னய்யா’ என்று கட்சிக்காரர்களைப் பார்த்து எரிச்சலடைந்தார். அதன்பிறகு பேச ஆரம்பித்த அவர், தொண்டை கரகரவென்று இருக்கிறது, ’வேறு வழியில்லை நீங்களா புரிந்து கொள்ளுங்கள்’ என்று தொடர்ந்து பேசினார்.

முதல்வரின் பிரச்சாரத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களுமே அதிகளவு திரண்டிருந்தனர். கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெயரளவுக்கே வந்திருந்தனர்.

அவர் பேசியதிலிருந்து..

* இத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஒருவரை வீடு தேடிச்சென்று தாக்க முயன்றார். அதிமுக வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். அவர் உங்களுக்கு வீடு தேடிவந்து சேவை செய்வார்.

* அதிமுக ஆட்சி தொடர்ந்தால் வியாபாரிகள் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் செயல்படலாம்.

* அதிமுக ஆட்சியில் 58 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்துள்ளோம். இனி ஏழை மாணாக்கர்கூட, நீட், ஐஏஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x