Published : 24 Mar 2021 11:59 AM
Last Updated : 24 Mar 2021 11:59 AM
ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை நிரூபித்தால் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வந்து மன்னிப்பு கேட்கத் தயார் என்று திமுக எம்.பி.யும் அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா தெரிவித்துள்ளார். நிரூபிக்காவிட்டால் முதல்வர் மன்னிப்பு கேட்பாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஓர் அணி, அமமுக தலைமையில் ஓர் அணி போட்டியிட, நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்துக் களம் காண்கிறது.
ஆட்சியைத் தக்கவைக்க அதிமுகவும், ஆட்சியைப் பிடிக்க திமுகவும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே சென்னை, மாதவரத்தில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது ஆ.ராசா பேசும்போது, ''ஊழலால்தான் கலைஞர் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நான் உங்கள் முன்னால் நின்று சவால் விடுகிறேன். ஊழலால்தான் இந்த ஆட்சி கலைக்கப்பட்டது என்று எங்காவது ஒரு ஆவணத்தில் காட்டி முதல்வர் பழனிசாமியால் நிரூபிக்க முடியுமா?
அப்படிச் செய்தால், நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) எந்த வாகனத்தில் சென்று கொண்டு இருக்கிறீர்களோ, அங்கே நேரடியாக வந்து நாங்கள் மன்னிப்பு கேட்கத் தயார். இல்லையென்றால் நீங்கள் அறிவாலயத்துக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஊழலுக்காக எங்கே, எப்போது கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது? ஜனநாயகத்திற்காகத்தான் எங்கள் ஆட்சி கலைக்கப்பட்டது'' என்று ஆ.ராசா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT