Published : 11 Mar 2021 10:15 AM
Last Updated : 11 Mar 2021 10:15 AM
தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மைதான் என்றும் எந்த நேரத்திலும் கூட்டணி குறித்து முடிவு வரும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்குவதில் முரண் ஏற்பட்டது. தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், கூட்டணியில் இருந்து விலகுவதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டு வருவதாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தங்கள் கூட்டணியில் இணையுமாறு தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. எனினும் தேமுதிக இதுகுறித்து எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே அமமுக, தேமுதிகவுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ''பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த நேரத்திலும் கூட்டணி முடிவு வரும். எல்லோரும் சேர வேண்டும் என்றுதானே கூட்டணி குறித்துப் பேசுவார்கள்? சீக்கிரத்தில் அறிவிப்பு வெளியாகும்.
மார்ச் 12-ம் தேதி அமமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியாகும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT