Published : 03 Mar 2021 06:24 PM
Last Updated : 03 Mar 2021 06:24 PM
குமரியில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய துணை ராணுவப்படையினர் இன்று வந்தனர். நாகர்கோவில் நகரப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல், மற்றும் குமரி மக்களவை இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய துணை ராணுவ படையினர் குமரி வந்துள்ளனர். முதல் கட்டமாக ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ள நிலையில் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு மேலும் கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பிற்காக வரவுள்ளனர்.
குமரியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் நாகர்கோவிலில் இன்று மத்திய துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடபெற்றது. குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு துவங்கி இளங்கடை சந்திப்பில் முடிவடைந்தது.
இதில் ஏடிஎஸ்பி.க்கள் ஈஸ்வரன், மணிமாறன், டிஎஸ்பி.க்கள் வேணுகோபால், பீட்டர் பால்துரை, சாம் வேதமாணிக்கம், மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.
கொடி அணிவகுப்பு ஊர்வலத்தின்போது மத்திய துணை ராணுவ படையினர் 60 பேர், தாலுகா காவலர்கள் 45 பேர், ஆயுதப்படை காவலர்கள் 50 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 60 பேர் உட்பட மொத்தம் 225 பேர் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எஸ்.பி. பத்ரிநாராயணன் கூறுகையில்; கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களுக்கு சட்டப்பேரவை. மற்றும் மக்களவை இடைத்தேர்தல் குறித்து பாதுகாப்பை உறுதி செய்யும் எண்ணம் உருவாகும் வகையில் இந்தக் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியை முன்வைத்து நாகர்கோவில் நகரில் கொடிஅணிவகப்பு ஊர்வலம் முதலில் நடந்துள்ளது. இனி அடுத்தடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள மேலும் 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் துணை ராணுவத்தினரின் கொடிஅணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும். பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
பொதும்ககளுக்கு பாதுகாப்பும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு தொடர்ச்சியாக இருக்கும். குமரி மாவட்டம் முழுவதம் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT