Published : 02 Mar 2021 07:50 PM
Last Updated : 02 Mar 2021 07:50 PM
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 06.04.2021 அன்று நடைபெறவுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம், கீழத்தட்டப்பாறை மற்றும் மேலத்தட்டப்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள வெடிமருந்து கிடங்களுகளில் எஸ்பி ஜெயக்குமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை சேமித்து வைக்கும் மூன்று கிடங்குகள் உள்ளன.
இந்த கிடங்குகளை பார்வையிட்ட எஸ்.பி, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், 'இந்த வெடிமருந்து பொருட்கள் கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வருவாய்த்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று, உரிய சான்றோடு வருபவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
அவ்வாறு வாங்க வருபவர்களிடம் அப்படியே கொடுத்து விடக்கூடாது. வெடிமருந்து விற்பனை கிடங்கின் பணியாளர்கள் சென்று, கல்குவாரிகள் மற்றும் கிணறுகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வெடிக்க வைக்க வேண்டும். மீதம் உள்ள வெடி பொருட்களை மீண்டும் அவர்களிடமிருந்து, திரும்ப பெற்று பாதுகாப்பான முறையில் கிடங்கில் இருப்பு வைக்க வேண்டும்.
முன்பின் தெரியாதவர்களுக்கோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கோ விற்பனை செய்யக்கூடாது. எவ்வித ஆபத்தும் நேராத அளவுக்கு வெடிமருந்து பொருட்களை கையாண்டு, வெடிமருந்து கிடங்குகளை பராமரிக்க வேண்டும்' என்று உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி ஊரக தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜ், தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT