Last Updated : 26 Feb, 2021 07:14 PM

 

Published : 26 Feb 2021 07:14 PM
Last Updated : 26 Feb 2021 07:14 PM

கடம்பூர்- கோவில்பட்டி 2-வது ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

கடம்பூர் முதல் கோவில்பட்டி வரையிலான இரண்டாவது இருப்புப்பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபேகுமார் ராய் தலைமையிலான அதிகாரிகள் டிராலியில் சென்று ஆய்வு நடத்தினர். படம்: என்.ராஜேஷ்

கோவில்பட்டி

கடம்பூர்- கோவில்பட்டி 2-வது ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை முதல் தூத்துக்குடி வரை இரண்டாவது இருப்புப்பாதை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

இதில் சாத்தூர் முதல் தூத்துக்குடி வரை ரூ.445 கோடியில் இரண்டாவது இருப்புப் பாதை அமைக்கும் பணியை கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

இந்த பணிகளில் ஏற்கனவே கடம்பூர்- வாஞ்சி மணியாச்சி -தட்டப்பாறை வரையிலான பணிகள் நிறைவு பெற்று பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெற்று தற்போது ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.

இதன் அடுத்தக் கட்டமாக கடம்பூர் முதல் கோவில்பட்டி வரையிலான இரண்டாவது இருப்புப்பாதை பணிகள் விரைவாக நடைபெற்று வந்தன.

இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் இன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் இரண்டாவது இருப்புப் பாதையில் டிராலியில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது இருப்புப் பாதையில் பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபேகுமார் ராய், ஆர்.வி.என்.எல். திட்ட இயக்குநர் கமலகரண் ரெட்டி, மதுரை கோட்ட பொது மேலாளர் லெனின் மற்றும் அதிகாரிகள் 5 டிராலிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இடையிடையே டிராலியில் இருந்து இறங்கி இருப்புப்பாதைகளுக்கு இடையிலான நீளம், ஒவ்வொரு ரயில்வே கிராசிங்கில் உள்ள கேட்களின் உயரம், அந்தப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கம்பிகள், கேட் கீப்பர் அறைகள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்தனர். மாலை 4 மணி வரை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து நாளை கடம்பூர் முதல் கோவில்பட்டி வரை அதிவேக ரயில் இயக்கி சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x