Published : 23 Feb 2021 09:02 PM
Last Updated : 23 Feb 2021 09:02 PM
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழாவில் இன்று மாலை சுவாமி சண்முகப்பெருமான் சிகப்பு சாத்தி கோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்செந்தூரில் மாசித்திருவிழா இம்மாதம் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினதோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 4.30 மணியளவில் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.30 மணியளவில் ஆறுமுகப்பெருமான் வெற்றி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார்.
அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.45 மணியளவில் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நாளை (பிப்.24) எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயிலில் வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்கிறார்.
திருவிழாவின் பத்தாம் நாளான வரும் 26-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 28-ம் தேதி 12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் பா.விஷ்ணுசந்திரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT