Published : 18 Feb 2021 05:51 PM
Last Updated : 18 Feb 2021 05:51 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாவில் குளறுபடி இருந்தது. இறந்தவர் பெயரில் பட்டா இருந்ததால் பயனாளி அதிர்ச்சி அடைந்தார்.
காரைக்குடியில் வருவாய்த்துறை சார்பில் ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் 532 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.
மேலும் அவர் பேசுகையில், ‘சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 900 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, முன்னாள் எம்பி செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், கோட்டாட்சியர் சுரேந்திரன், வட்டாட்சியர் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் இறந்தவர் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. காரைக்குடி அருகே கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்லன் என்பவர் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் இறந்துபோன அவரது தந்தை கருப்பையா பெயரில் பட்டா வழங்கப்பட்டது. மேலும் உறவு முறையும் தவறாக இருந்தது. இதனால் செல்லன் அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் சிலரது பட்டாக்களிலும் குளறுபடி இருந்ததாக புகார் எழுந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT