Published : 17 Feb 2021 10:04 PM
Last Updated : 17 Feb 2021 10:04 PM
வருவாய்த்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் 9 வட்டாட்சியர் அலுவலகங்கள், 2 கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 224 பேர் பணிக்கு செல்லவில்லை.
இதனால் அந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வாருவாய்த்துறை சான்றுகள், பட்டா மாறுதல் உத்தரவு வழங்கல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்க உள்ளநிலையில் வருவாய்த்துறையினர் வேலைநிறுத்தத்தால் தேர்தல் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஆனந்த பூபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT