Published : 13 Feb 2021 02:31 PM
Last Updated : 13 Feb 2021 02:31 PM
தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் அண்மைக் காலத்தில் இல்லாத வகையில் நேற்று வெண்பட்டுக் கூடுகளின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தருமபுரி 4 ரோடு பகுதியில் தமிழக பட்டு வளர்ச்சித்துறை சார்பில் அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் பட்டுக் கூடுகள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பட்டுக் கூடுகளை இங்கு விற்பனைக்கு எடுத்து வருவது வழக்கம்.
அதுபோல, பட்டுக்கூடு வியாபாரிகளும் இந்த மையத்துக்கு தினந்தோறும் வருகை தருவது வழக்கம். தருமபுரி பட்டுக்கூடு ஏல விற்பனை மையத்தில் கடந்த சில நாட்களாகவே பட்டுக் கூடுகளுக்கான விலை ஏறுமுகத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில், அண்மைக் காலத்தில் இல்லாத வகையில் நேற்று (பிப்.12) வெண்பட்டுக் கூடுகளின் விலை உச்சத்தைத் தொட்டது. தரமான வெண்பட்டுக் கூடுகள் ஒரு கிலோ ரூ.490 என்ற விலைக்கு ஏலத்தில் விற்பனையானது. குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு 280 ரூபாயும், சராசரி விலையாக கிலோவுக்கு 473.66 ரூபாயும் கிடைத்தது. நேற்றைய ஏலத்திற்குப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11 விவசாயிகள் 720.180 கிலோ வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
ஏல விற்பனை மூலம் நேற்று 3 லட்சத்து 41 ஆயிரத்து 120 ரூபாய்க்குப் பட்டுக்கூடுகள் வர்த்தகம் நடைபெற்றது. பட்டுக் கூடுகள் விலை புதிய உச்சம் தொட்டிருப்பதால், பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT